கும்ப்ளே பதவி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும் -இந்திய கிரிக்கெட் நிர்வாகம்!

Sunday, June 11th, 2017

கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்று இருப்பதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை உடனடியாக நீக்க வேண்டாம் என்று ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் விரும்புவதாக தெரிகிறது.

அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ராஜீவ் சுக்லா, சி.கே.கண்ணா ஆகியோரும் பயிற்சியாளராக கும்ப்ளே நீடிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கேப்டன் விராட்கோலி மட்டும் கும்ப்ளேவை அந்த பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கேப்டன் சொல்வதற்காக பயிற்சியாளரை காரணம் இல்லாமல் நீக்கினால் அது தவறான முன்உதாரணமாக அமைந்து விடும் என்று நிர்வாக கமிட்டியினர் முடிவு எடுக்க தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.ஆலோசனை கமிட்டி கூட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு பணிகள் குறித்து ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் விவாதித்துள்ளனர்.

பயிற்சியாளர் பதவி குறித்து முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கண்ணாவும், புதிய பயிற்சியாளர் தேர்வு பணியை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தது நினைவிருக்கலாம். இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே தொடருவார் என்று தெரிகிறது.

Related posts: