கிரிக்கட் சபை குழுவினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு ஐ.சி.சி அனுமதி!

Wednesday, July 24th, 2019

சர்வதேச கிரிக்கட் சபையின் வருடாந்த சபைக்கூட்டம் நேற்றைய தினம் இலண்டன் நகரில் இடம்பெற்றது.

இதன்போது கிரிக்கட் சபை குழுவினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளன.

சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் சஷான் மனோகர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அனைத்து நாடுகளின் கிரிக்கட் சபை தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிரிக்கட் சபை குழுவினால் முன்வைக்கப்பட்டசில யோசனைகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன் களப்போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகும் பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள், மற்றும் களத்தடுப்பாளர்கள் என அனைவருக்கும் பதிலாக அதே அணியை சேர்ந்த வீரர்களை பதிலீடு செய்ய முடியும் என்ற யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் சர்வதேச கிரிக்கட் சபை வைத்தியர்கள் மற்றும் நடுவர்களின் ஆலோசனைக்கு அமைய வீரர்கள் பதிலீடு செய்யப்படுவார்கள் என்பதோடு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஏசஷ் தொடரில் இந்த புதிய விதிமுறைகள் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அணியின் தலைவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் தண்டனை நீக்கப்பட்டு அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் அல்லது தண்டனை விதிப்பதற்கான யோசனைக்கும் சர்வதேச கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு வீரருக்கும் அவர் பெற்றுள்ள மொத்த புள்ளிகளில் இருந்து 2 புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் அந்த சபை அறிவித்துள்ளது.

Related posts: