கால்பந்து வீரருக்கு கொரோனா!

Sunday, July 26th, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து வீரரான சேவியர் ஹெர்ணாண்டஸ் என்கிற ஸவி கூறியுள்ளார்.

ஸ்பெயின் அணி 2000 ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் ஸவி இடம்பெற்றிருந்தார். ஸ்பெயின் அணிக்காக 133 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2010 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் அணி வென்றதற்கு ஸவி முக்கியக் காரணமாக இருந்தார்.

2014 உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உலகின் மிகச்சிறந்த நடுக்கள கால்பந்து வீரராக ஸவி அறியப்படுகிறார்.

கத்தாரைச் சேர்ந்த கால்பந்து கிளப்பான அல் சத் அணியின் மேலாளராக ஸவி தற்போது பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கத்தார் ஸ்டார்ஸ் லீக் போட்டியில் பணியாற்றியபோது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நல்ல உடல்நிலையில் உள்ளேன். எனினும் விதிமுறைகளின்படி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

பார்சிலோனா கிளப்புக்காக 505 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸவி, அல் சத் அணிக்காக 2015 முதல் விளையாடி வந்தார். பிறகு, 2019 இல் அந்த அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார்.

Related posts: