ஐ.பி.எல்.: பஞ்சாப்பை தொடரிலிருந்து வெளியேற்றியது சென்னை அணி!

Monday, November 2nd, 2020

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 53ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைக்கலாம் என்ற நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஏற்கனவே பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணி சார்பில், கே.எல். ராகுல் 29 ஓட்டங்களையும், மாயங் அகர்வால் 26 ஓட்டங்களையும், கிறிஸ் கெய்ல் 12 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரான் 2 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், தாஹிர், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதில் சென்னை அணி சார்பில், ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், டு பிளெஸிஸ் 48 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்தான் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

Related posts: