ஐ.பி.எல். தொடர்:  ஹைதராபாத் அசத்தல் வெற்றி!

Friday, April 27th, 2018

ஹைதரபாத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது லீக் போட்டியில் பஞ்சாப்-ஹைதராபாத் அணிகள் மோதின. ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவான், கானே வில்லியம்சன் களமிறங்கினர். அன்கித் ராஜ்பூட் வீசிய முதல் ஓவரிலே கானே வில்லியம்சன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வந்த சஹா 6, மற்றொரு துவக்க வீரர் தவான் 11 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர். இதனால் ஹைதராபாத் அணி ஒரு கட்டத்தில் 27 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் வந்த மணீஷ் பாண்டே மற்றும் ஷகிப் அல்ஹசன் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இவரும் ஒன்றும், இரண்டுமாக எடுத்து வந்தனர்.

சிறப்பாக இந்த ஜோடி விளையாடிக் கொண்டிருந்த போது ஷகிப் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் யூசுப் பதான் களமிறங்கினார்.

நிதானமாக விளையாடிய மணிஷ் பாண்டே அரைசதம் கடந்தார். அவர் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அன்கித் ராஜ்பூட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. இதில் யூசுப் பதான் 21 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் அன்கித் ராஜ்பூட் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.

133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களான ராகுல்-கெய்ல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ராகுல் 32 ஓட்டங்களிலும், கெய்ல் 23 ஓட்டங்களிலும் வெளியேற பஞ்சாப் அணியின் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.

இவர்களைத் தொடர்ந்து வந்த அகர்வால் 12, கருண் நாயர் 13, ஆரோன் பின்ச் 8, மனோஜ் திவாரி 1, அஸ்வின் 4 என வெளியேறியதால் பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 119 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் ஹைதரபாத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி இந்த தோல்வியின் மூலம் 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று ரன் விகிதத்தின் அடிப்படையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை அணி 6 போட்டிகளில் 5 வெற்றி 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதரபாத் அணி விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: