ஐ.பி.எல். தொடர்: பஞ்சாபை வென்றது கொல்கத்தா

Wednesday, April 20th, 2016

ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாபை 6 விக்கெட்கள் வித்தியாத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் மொஹாலியில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் கொல்கத்தா அணித்தலைவர் காம்பீர் பந்து வீச்சை தெரிவு செய்தார். இதையடுத்து பஞ்சாப்பின் முரளி விஜய், மனன் வோரா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வோரா 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷான் மார்ஷ் முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். இந்நிலையில் 4 பவுண்டரிகள் உட்பட 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 138 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உட்பட 56 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் மோர்னே மோர்கல், சுனில் நரேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்பீர் மற்றும் உத்தப்பா நல்ல அடித்தளமிட்டனர். அணியின் எண்ணிக்கை 83 ஓட்டங்களாக இருந்தபோது 9 பவுண்டரி உட்பட 53 ஓட்டங்கள் எடுத்து உத்தப்பா ஆட்டமிழந்தார். பின்னர் கம்பீரும் 3 பவுண்டரிகள் உட்பட 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த இணைந்த மனீஷ் பாண்டே, சாகிப் அல் ஹாசன் இருவரும் முறையே 12 மற்றும் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

குறைந்த இலக்கு என்பதால் விக்கெட் வீழ்ச்சி பெரிதாக பாதிப்பதை ஏற்படுத்தவில்லை. இறுதியில் 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 11ஓட்டங்களுடனும், யூசப் பதான் 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related posts: