ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது கொல்கத்தா!

Thursday, May 26th, 2016

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற ​வெளியேற்றல் சுற்று போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் வெளியேற்றல் சுற்று போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், மோர்கல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர். இதனையடுத்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். புவனேஸ் குமார் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

ஹைதராபாத் அணியில் 2 விக்கெட்டுக்களையும், 31 ஓட்டங்களையும் எடுத்த ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஹைதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் குஜராத்துடன் மோதுகின்றது.

அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது.

Related posts: