உலகக் கிண்ண தொடரில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி!

Friday, October 27th, 2023

உலகக் கிண்ண தொடரில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணியை இலங்கை அணி வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று பெங்குளூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது திணறியதுடன், 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

வெறும் 33 ஓவர்களுக்கு மாத்திரமே இங்கிலாந்தால் தாக்குப்பிடிக்க முடிந்தது. பென் ஸ்டொக் மாத்திரம் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவியிருந்தார்.

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையையே பெற்றதுடன், 6 வீரர்கள் ஒற்றை ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர்.

பந்துவீச்சில் மிரட்டிய லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித, எஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மஹீஸ் தீக்ஸன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

157 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப இரண்டு விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்ட போதிலும், பதும் நிஸங்க மற்றும் சதீர சமரவிக்ர ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காது அதிரடியை வெளிப்படுத்தி இலங்கை அணியை வெற்றிபெற செய்தது.

25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 160 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றிபெற்றது.

அதிரடியாக ஆடிய பதும் நிஸங்க77 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ர 65 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டேவிட் வில்லி வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளை கைபற்றினார்.

2007ஆம் ஆண்டின் பின் உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி இங்கிலாந்தை சந்தித்த 4 ஆட்டங்களில் ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த நிலையில் இன்றைய 5ஆவது ஆட்டத்திலும் வெற்றிபெற்றுள்ளது.

2007ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி நார்த் சவுண்டில் நடைபெற்ற போட்டியில் இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.

2011ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

2015ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி வெலிங்டனில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2019ஆம் ஆண்டு ஜூன் 21இல் லீட்ஸில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது

000

Related posts: