இலங்கை- −அவுஸ்திரேலிய 2 ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

Thursday, August 4th, 2016

இலங்கை- −அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலிய அணியில் புதிய சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சேர்ப்பதற்கு அவ்வணி ஆலோசித்து போட்டி நடைபெறுவதற்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப். பல்லேகலயில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இவர் மட்டும்தான் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலியில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் காலியில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட நுவான் பிரதீப்பிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இவர் மட்டும்தான் உள்ளார். தற்போது காயம் அடைந்துள்ளதால், உடல்தகுதி பரிசோதனையில் அவர் தகுதிப்பெற்றால் இன்றைய போட்டியில் இடம்பெறுவாரா? என்பது தெரியவரும். உடற்தகுதி பெறாவிடில் இரண்டு புதுமுக பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் இடம்பெறுவார்.

ஏற்கனவே அந்த அணியின் தம்பிக்க பிரசாத், துஷ்மந்த சமீர, ஜெப்ரி வான்டர்சே மற்றும் லக்மல் ஆகியோர் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார்.

காலி டெஸ்டில் நுவான் பிரதீப் இடம்பெறாவிடில் 10 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் ஹேரத்துதான். தில்ருவான் பெரேராவிற்கு காலிதான் 10-வது டெஸ்ட். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சந்தகன் கடந்த போட்டியில்தான் அறிமுகமானார்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி, சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருடன் களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வணியின் பயிற்றுநர் டெரன் லீமனும், அவ்வாறான சமிக்ஞைகளையே வெளிப்படுத்தியுள்ளார்.

முதலாவது போட்டி, பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்றபோது, நதன் லையன், ஸ்டீவன் ஓப் கீ ஆகிய இருவர் களமிறங்கியிருந்தனர். அப்போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, காயம் காரணமாக ஓப் கீ வெளியேற வேண்டியேற்பட்டது. அப்போட்டியில் இலங்கை அணிக்கு, 106 ஓட்டங்களால் வெற்றி கிடைத்திருந்தது.

இந்நிலையில், காலி மைதானம், வழக்கமாக சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான மைதானமாகும். எனவே தான், சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருடன் களமிறங்குவது குறித்து, அவுஸ்திரேலிய அணி ஓரளவு உறுதியாகக் காணப்படுகிறது. ஓப் கீ-க்குப் பதிலாக டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள ஜோன் ஹொலன்ட், தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன் ஹொலன்ட் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டெரன் லீமன், ‘அவர் உயரமானவர், சிறப்பான வகையில் பந்தை வீசுபவர், சரியான வேகத்தில் வீசுபவர். இங்கு, வெற்றிகரமாக அமைவார் என நான் உறுதியான நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ‘அது தான் சிறப்பான முறை என நான் நினைக்கிறேன்.ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரை விளையாடுவோம் என நான் ஓரளவு உறுதியாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

Related posts: