இலங்கை வீரர் சேனநாயக்கவுக்கு அபராதம்!

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பல்லேகெலயில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், சர்வதேச கிரிக்கெட் சபையின் நெறிமுறைக் கோவையை மீறியதன் காரணமாக, இலங்கையணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில், தனது நான்கு ஓவர்களில் 49 ஓட்டங்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்த சேனநாயக்க, சர்வதேசப் போட்டியொன்றில் ஆட்டமிழந்து செல்லும் துடுப்பாட்டவீரரரை இகழ்ந்துரைக்கும் அல்லது ஆத்திரமூட்டக் கூடிய எதிர்வினையைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகங்கள், நடவடிக்கைகள், குறியீடுகளைப் பயன்படுத்துகின்ற சரத்து 2.1.7ஐ மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியின் ஐந்தாவது ஓவரில், குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராகக் கடமையாற்றிய டேவிட் வோணரை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்த பின்னர், மைதானத்தை விட்டு வெளியேறுமாறு சேனநாயக்க சமிக்ஞை செய்தமை காரணமாக, சேனநாயக்கவின் போட்டி ஊதியத்தில், 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தை சேனநாயக்க ஏற்றுக் கொண்டதாலும் போட்டி மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத்தால் விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொண்டதாலும், உத்தியோகபூர்வமான விசாரணை தேவைப்பட்டிருக்கவில்லை.
Related posts:
|
|