இறுதிப் போட்டியில் இந்தியா: அதிரடி காட்டிய யுவராஜ் சிங்கை பாராட்டிய டோனி

Saturday, March 5th, 2016

 

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

கபுகேந்திரா (30), ஸ்ரீவர்த்தனா ( 22) சிறப்பாக ஆடினர். அஸ்வின், பும்ரா, ஹர்த்திக் பாண்டயா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி கோஹ்லி (56), யுவராஜ் சிங் (35) அதிரடியால் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3வது வெற்றியாகும். ’ஹாட்ரிக்’ வெற்றி மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், ”இந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

நான் ஏற்கனவே கூறியது போல் அவர் ஆடுகளத்தில் நிலைத்து நின்றால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி விடுவார்.

அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்தது. சரியான நேரத்தில் அவர் நேர்த்தியான ஷாட்களை வெளிப்படுத்தி சிக்சர்களை விளாசினார். அவர் களம் இறங்கும் போதே நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது.

இந்த நேரத்தில் கோஹ்லியையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது ஆட்டம் எப்போதுமே அணிக்கு முக்கிய பங்காக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Related posts: