இராணுவ ரோந்து பணியில் டோனி!
Friday, July 26th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி இராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு பிராந்திய ராணுவத்தின் 106 வது பாராசூட் படையின் லெப்டினெட் கலோனல் என்ற கவுரவ பதவி டோனிக்கு வழங்கப்பட்டது.
இந்த பதவியை ஏற்ற அவர் 2015 ஆம் ஆண்டில் ஆக்ராவில் உள்ள பாரசூட் படைதளத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் 5 முறை குதித்து பயிற்சி எடுத்தார். இதனால் பாரசூட் படையில் இணைந்து செயல்படும் முழு அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் தான் விளையாடவில்லை எனவும் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட அவரது படைப்பிரிவில் இணைந்து இரு மாத காலம் பணியாற்ற விரும்புவதாகவும் டோனி தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இப்போது டோனியின் படை பிரிவு உள்ள காஷ்மீர் முகாமில் அவர் பணியாற்ற அனுமதி வழங்கி உள்ளார். வருகிற 31 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 15-ஆம் திகதி வரை டோனி தமது படைப்பிரிவினரோடு தங்கி பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் வீரர்களின் முகாமில் தங்கி ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் வீரர்களோடு வீரராக ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டோனி இந்த பணியில் ஈடுபடுவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் ராணுவத்தின் பணியாற்றும் ஆர்வம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Related posts:
|
|
|


