இந்திய அணி வெற்றி !
Friday, September 9th, 2022
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் தகுதிகாண் போட்டியில் இந்திய அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நேற்றையதினம் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 122 ஓட்டங்களையும், அணித்தலைவர் கே.எல்.ராகுல் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். விராட் கோலி சர்வதேச இருபதுக்கு20 போட்டிகளில் பெற்ற கன்னிச்சதம் இதுவாகும்.
இவர் 61 பந்துகளுக்கு முகங்கொடுத்து 12 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 122 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், அணித்தலைவர் கே.எல்.ராகுல் 41 பந்துகளுக்கு முகங்கொடுத்து 6 நான்கு ஓட்டங்கள் 02 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சர்வதேச இருபதுக்கு20 போட்டிகளில் அவர் பெற்ற 17ஆவது அரைச்சதம் இதுவாகும்.
விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 119 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இந்த ஆண்டு ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
அத்துடன், இந்த ஆண்டு ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்னிங்ஸ் ஒன்றில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியுள்ளது.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின்பரீத் அஹமட் 57 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 213 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், முஜிபுர் ரஹ்மான் 18 ஓட்டங்களையும், ரஷித் கான் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய ஆப்கானிஸ்தான் அணியின் ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 04 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் போட்டி ஒன்றில் இவர் பெற்ற அதிக விக்கெட் எண்ணிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


