ஆஸ்திரேலியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Tuesday, March 13th, 2018

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

போர்ட் எலிசபெத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் வார்னர் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 118.4 ஓவர்களில் 382 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 126 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸில் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 79 ஓவர்களில் 239 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 75 ரன்கள் எட்டியிருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 6 பேரை வீழ்த்தியிருந்தார்.

இறுதியாக 101 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவில் டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுக்க, கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 2, புருயின் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். முன்னதாக, தொடக்க வீரர் மார்க்ரம் 21, உடன் வந்த டீன் எல்கர் 5, ஹஷிம் ஆம்லா 27 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 2, ஹேஸில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸ்களிலுமாக 11 விக்கெட்டுகளை சாய்த்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ரபாடா மீது புகார்

2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விதிகளை மீறிய வகையில் செயல்பட்டதாக ரபாடா மீது மேலும் ஓர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்த ரபாடா, உற்சாக வெறியில் ஸ்மித்தின் தோளில் மோதினார். அவரது இந்த நடவடிக்கை தொடர்பாக போட்டி நடுவர்கள் புகார் அளித்ததை அடுத்து, இத்தொடரின் எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

அதே 2-ஆவது டெஸ்டில் 3-ஆவது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னரை போல்டாக்கிய ரபாடா, அப்போதும் விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். இதையடுத்து, ‘முதல் நிலை’ குற்றத்தில் ஈடுபட்டதாக ரபாடா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக இழக்கும் ரபாடா, ஒன்று அல்லது இரண்டு தரவரிசை புள்ளிகளையும் இழக்கிறார்.

Related posts: