சங்ககால கட்டிடங்கள் மதுரை அருகே அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு!

Tuesday, May 31st, 2016

மதுரையை அடுத்த கீழடி என்ற கிராமத்தில் கடந்த ஆண்டிலிருந்து நடந்து வரும் தொல்லியல் அகழ்வாய்வில், சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் கட்டிட அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் கடந்த ஆண்டு இந்திய தொல்லியல் ஆய்வுக் கழகத்தினால் செய்யப்பட்டு வரும் அகழாய்வுகளில் முதல் கட்டமாக 43 குழிகளும் இரண்டாம் கட்டத்தில் சுமார் 53 குழிகளிலும் தோண்டப்பட்டு, அங்கு அகழ்வாய்வு நடக்கிறது.

இந்த அகழ்வாய்வில் கிடைத்த, உடைந்த மண்பாண்டங்களை வைத்து, இந்த குடியிருப்பின் காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி ஆறாம் நூற்றாண்டு என்று தோராயமாக்க் கணித்திருப்பதாகவும் , ஆனால் பொருட்கள் கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவைகளின் காலம் அறிவியல் ரீதியாகக் கணிக்கப்படும் என்றும் கூறுகிறார் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவின் கண்காணிப்பு தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா .

இந்தக் கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதாக கூறும் ராமகிருஷ்ணா, சங்க காலத்தில் இது போன்ற கட்டிடங்கள் இருந்ததற்கான இலக்கிய சான்றுகள் இருந்தாலும், இது வரை அந்த காலத்திய கட்டிடங்களின் சான்றுகள் கிடைக்கவில்லை, இப்போதுதான் அவை முதன் முதலாகக் கிடைத்திருக்கின்றன என்றும் கூறுகிறார்.

அகழ்வாய்வு முழுமையாக செய்யவேண்டுமென்றால் 10 அல்லது 15 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று கூறிய ராமகிருஷ்ணா, ஆனால் இப்போதைக்கு இரண்டு கட்டங்களில்தான் அகழ்வாய்வு நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். (நன்றி இணையம்)

Related posts: