கடல்நீர் மட்டம் 2100-ஆம் ஆண்டுக்குள் 25 செ.மீ. உயரும்- ஆய்வில் எச்சரிக்கை!

Wednesday, May 29th, 2019

உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால் வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25 செ.மீ. உயரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வடதுருவப் பகுதிக்கு அருகிலுள்ள கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தென்துருவப் பகுதியான அண்டார்டிகாவிலும் அதிகளவிலான பனிப்பாறைகள் காணப்படுகின்றன. ஆனால் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்து வருகிறது. இதனால் கடல்நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இது குறித்து அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது:

உலகில் பல்வேறு இடங்களில் அந்தந்த இடங்களின் சூழ்நிலைக்கு ஏற்ற சீரான வேகத்தில் பனிப்பாறைகள் உருகிவருகின்றன. இதைக் கண்காணித்து வரும் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து 200க்கும் அதிகமான கணினி பனிப்பாறை மாதிரிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்தக் கணினி மாதிரிகள் மூலம் உலகம் முழுவதுமுள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்த ஆய்வின் மூலம் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வரும் 2100-ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் சுமார் 25.4 செ.மீ. உயரும். கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது மட்டுமே கடல்நீர் மட்ட உயர்வுக்குக் காரணம் என்று பலர் நினைத்துவருகின்றனர். ஆனால் மற்ற நாடுகளில் உள்ள சிறு பனிப்பாறைகளும் கடல்நீர் மட்ட உயர்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள 25,000க்கும் அதிகமான சிறு பனிப்பாறைகள், 2100-ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 50 சதவீத அளவு உருகிவிடும். உலக அளவில் நோக்கும்போது, சராசரியாக 18 முதல் 36 சதவீதப் பனிப்பாறைகள் உருகிவிடும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: