அந்தார்டிகாவில் அதிசய ஏரி!

Saturday, August 13th, 2016
பூமியின் ஏழாவது கண்டமும் துருவ பனிப்பிரதேசமுமான அண்டார்டிகாவில் பெரிய ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பனிப்பாறைகளுக்கு இடையிலான பள்ளத்தாக்கில் பனிக்கட்டிகள் விலகியது போல காணப்படுகிறது. அதில் தொன்மையான உயிர்களின் படிமங்கள் இருக்கும் என்பதால் விஞ்ஞானிகள் ஆய்வு பொக்கிஷமாக கருதுகின்றனர்.

கடந்த வாரம், வியன்னாவில் நடந்த ஐரோப்பிய புவிஅறிவியல் சங்க கூட்டத்தில், அங்கு ஏரி இருப்பதற்கான ரேடார் விவரங்களை, விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இந்த ஏரி, அந்த கண்டத்தின் கிழக்கு கரையோரமாக உள்ள, ராணி எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ள பகுதி வழியாக செல்லும் பெரிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ரிப்பன் வடிவிலான இதன் நீளம் 87 மைல், அகலம் 12 மைல் ஆகும்.

இது அண்டார்டிகாவின் சறுக்கு பனிக்கட்டியின் மீது, அமைந்திருக்கும் வோஸ்டாக் ஏரியை விட மிகவும் சிறியதுதான். வோஸ்டாக் ஏரியின் நீளம் 160 மைல் அகலம் 30 மைல். இந்த புதிய ஏரி அங்குள்ள ஆராய்ச்சி தளத்திற்கு அருகாமையில் 62 மைல் தூரத்தில் உள்ளது. ஆனால், வோஸ்டாக் ஏரி பெரியதானாலும் ஆராய்ச்சி தளத்திற்கும் கண்டத்தின் உறைந்த பகுதிக்கும் வெகு தூரத்தில் இருக்கிறது. என கூறுகின்றனர்.

மேலும், ’அந்த ஏரி நேரானதாக, 100 மைல் தூரத்துக்கு இருக்கிறது. அங்கு அதுபோல, பல ஏரிகள் இருக்கிறது’ என ஆய்வாளர்கள் குழுவின் உறுப்பினரும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மாணவருமான மார்டின் சீகர்ட் தன் கணிப்பை கூறியுள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இந்த ஏரியின் இருப்பு மற்றும் தன்மையை உறுதிப்படுத்த, மேலிருந்து பனி அடுக்குகளை ஊடுருவும் ரேடாரை பயன்படுத்தி எடுக்கும் புகைப்படங்களை சேகரிக்க முடிவுசெய்துள்ளனர். இதில் சீனா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் பங்குபெறுகின்றனர்.

’இது அண்டார்டிகாவின் ஆய்வு செய்யப்படாத கடைசிப் பகுதி. இந்த மேலான கண்டுபிடிப்புச் செய்தியை மேலும் உறுதிப்படுத்த வேண்டியது பாக்கியிருக்கிறது. என்கிறார்.’ ப்ரின் ஹப்பார்டு என்ற அபேரிஸ்ட்வித் பல்கலைக்கழக விஞ்ஞானி.

இந்த புதிய கண்டுபிடிப்பு அறிவியல் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அதற்கு காரணம் பூமி தோன்றிய காலம் முதல் மனித இனத்தால் தீண்டப்படாமல் உறைந்திருந்ததால், பதப்படுத்தப்பட்டதுபோல சேதமின்றி அதன் உட்கிடக்கைகள் இருக்கும். அதில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிர் படிமங்கள் நிச்சயமாக அடங்கியிருக்கலாம்.

பூமியில் முதலில் தோன்றிய நுண்ணுயிர்கள் தொடங்கி, ஒரு செல் உயிரிகள் பல செல் உயிரிகள் என தொன்மையான உயிரியல் சான்றுகள் அதில் கிடைக்கும். அது இந்த பூமியில் உயிர்கள் தோன்றிய வரலாற்றை இன்னும் உறுதியான வகையில் நாம் அறிந்துகொள்ள வழிசெய்யும். இது நிலவில் உள்ள பனிப்பாறைகள் செவ்வாய் கிரகத்தின் துருவ பனிப்பாறைகள், ஜூபிடர் கிரகத்தின் நிலவான யூரோபாவை ஆய்வுசெய்வதற்கு சமமானது என கருதுகின்றனர்.

Related posts: