30 நாள்களுக்குள் 530 முறைப்பாடுகள் – பவ்ரல்!

Saturday, January 13th, 2018

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு 30 நாள்கள் நிறைவடையும் நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 243 கிடைக்கப்பெற்றுள்ளது. 287 தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது:

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் பல காரணங்களுக்காக பிற்போடப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இம்முறை இடம்பெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளமை சிறப்பு அம்சமாகும். தேர்தல் ஆணைக்குழு மிக அவதானத்துடன் செயற்படுகின்றது.

சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். இதனைத் தவிர்ப்பதற்காக தேர்தல் அவதானிப்பு பணிகளை பவ்ரல் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. தேர்தலுக்கு முந்திய காலம் தொடக்கம் முடிவடையும் வரை அவதானிப்பு பணிகளை மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம். இம்முறை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் 7 ஆயிரம் பேர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் அரச ஊழியர்களை தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts: