3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா!
Sunday, October 31st, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் தாழமுக்கம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து ஈரப்பதன் மிகுந்த காற்றை தன்னுள் ஈர்ப்பதனால் இலங்கையின் பல பகுதிகளும் எதிர்வரும் 03.ஆம் திகதி வரை மழை தொடரும்.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது. கரையோரப் பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் எதிர்வரும் 09 ஆம் திகதி வங்காள விரிகுடா கடற்பகுதியில் மற்றொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


