2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவர 2018 ஆம் ஆண்டில் கொள்கை ரீதியாக நாம் தீர்மானித்தோம்.

நாடாளுமன்றிலும் இந்த சட்டமூலத்தை நாம் தாக்கல் செய்திருந்தோம். இது உயர்நீதிமன்றினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

இறுதியாக இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதுதான், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது.

இதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையும் மாற்றமடைந்து, நாட்டில் குழப்பமானதொரு சூழல் நிலவியது. இந்த காரணத்தினால், இந்தப் பணியை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது போனது.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ், சட்டமூலமொன்றை சமர்ப்பித்திருந்தோம். இது சற்று கடுமையான சரத்துக்களை கொண்டிப்பதாக எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டன.

அனைத்து கட்சிகளுடனும், தூதுவர்களுடனும் கலந்துரையாடி அதனை இல்லாது செய்தோம். பின்னர்தான், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாம் தயாரித்தோம். இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்க முடியாமல் உள்ளது.

கடந்த காலங்களில், பல சட்டமூலங்கள் உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. நீதிமன்றில் இதுதொடர்பான வழங்கு விசாரணைகள் இடம்பெற்றால், பொது வழக்குகளுக்கு காலம் தாழ்த்தப்படும் என்பதால் தான், காலவரையறையின்றி சட்டமூலத்தை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கும் காலப்பகுதியாகும். எனவே, நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டால் விடுமுறைக்குச் செல்லாமல் வழக்குகளை நீதிபதிகளுக்கு விசாரணை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

மேலும், விடுமுறைக் காலம் என்பதால் பல சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றங்களுக்கு வருகைத் தர நேரம் போதாமல் உள்ளது.

இந்த காலத்தில் நாம் சட்டமூலத்தை சமர்ப்பித்தால், நீதிமன்ற விடுமுறைக் காலத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுவார்கள்.

எனவே, எந்த தரப்பையும் பாதிக்காத வகையில்தான் நாம் இந்த விடயத்தில் செயற்படுவோம். ஜனவரி, பெப்ரவரியில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: