2011 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸாருக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை!

Wednesday, September 7th, 2016

சந்தேக நபர் ஒருவரை விசாரணைக்காகத் தடுத்து வைத்திருந்தபோது சித்திரவதை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை மூலம் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று (6) உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பொறுப்பில் இருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்பவரை சித்திரவதைக்கு உட்படுத்தினர் எனக் பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சித்திரவதை சம்பவம் தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் நடத்தப்பட்ட இறுதி விசாரணைகளின் கோவைகள் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சித்திரவதை சம்பந்தப்பட்ட வழக்கு நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற சட்ட விதப்புரைக்கமைய சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மாநாட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 8 பொலிஸாருக்கு எதிராக இந்த வழக்கை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க முதியான்சலாகே சந்தக்க நிசாந்த பிரிய பண்டார, ஞானலிங்கம் மயூரன், பத்திநாதன் தேவதயாளன், ராஜபக்ச முதியான்சலாகே சஞ்சீவ ராஜபக்ச, கோன் கலகே ஜயந்த, வீரசிங்க தொரயலாகே ஹேமச்சந்திர வீரசிங்க, விஜயரட்னம் கோபி கிருஷ்ணன், முனுகொட ஹேவகே விஜேசிங்க ஆகிய எட்டு பொலிசார் இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு சித்திரவதைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவராகிய சிறிஸ்கந்தராசா சுமணன் மரணமடைந்துள்ளார் எனவும், அவ்வாறு மரணமடைந்த பின்னர் இறந்தவருடைய உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, முக்கிய தடயப் பொருளாக, எதிரிகளுககு எதிரான குற்றப்பகிர்வு பத்திரத்துடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 8 தமிழ் சிவிலியன்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறில் அபேசிங்க உள்ளிட்ட 14 பொலிசார், கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர், மருத்துவ பரிசோதனை நடத்திய விசேட சட்ட வைத்திய அதிகாரி திலக் ரமேஸ் அழகியவண்ண, விஜயபாகு படைப்பிரிவைச் சேர்ந்த 2 இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் 3 குற்றப் புலனாய்வு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 29 பேர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு முதற் தடவையாக நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்தன் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிசாரும் கடமையில் இருக்க்கின்றனர் எனத் தெரிவித்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவதற்கு குற்றப் புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக அழைப்பாணை பிறப்பிக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து இந்த 8 பொலிசாரையும் இம்மாதம் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி இளஞ்செழியன் அழைப்பாணை மூலமாக உத்தரவிட்டுள்ளார்.

jaffna court 898w

Related posts: