200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை இலங்கைக்கு வழங்குகிறது சீனா – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல. பீரிஸ் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022

இலங்கைக்கு 200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல. பீரிஸ் சீனாதேசத்தின் யுனான் மாகாணமும் 1.5 மில்லியன் யுவான் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக கொழும்பிலும், பீஜிங்கிலும் உள்ள சீன மற்றும் இலங்கை தூதரகங்கள், இலங்கையில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனத் தூதுவர் ஸி சென்ஹொங்  தெரிவித்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை, சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் நேற்றையதினம் வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்தித்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிசக்தித் தட்டுப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர், சீன தூதுவருக்கு விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவி மற்றும் இலங்கையின் கடனை மறுசீரமைத்தல் போன்றவற்றிற்காக நடைபெறும் கலந்துரையாடல் உட்பட, தற்போதைய சூழ்நிலையை உடனடியாக சமாளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், சீன தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக நெருக்கடியான நேரத்தில் நிதியமைப்பிற்கான மேலதிக உதவிகளை நல்குமாறு சீனாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

சீன அரசாங்கத்தின் நேரடி ஆதரவு, பிராந்திய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சீனாவின் ஆதரவு உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தூதுவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையிலேயே 5000 மெட்ரிக் டன் அரிசி, மருந்துகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும்  ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, இலங்கைக்கு 200 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அத்துடன், யுனான் மாகாணம் 1.5 மில்லியன் யுவான் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளதெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களது விவரம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது!
தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோ...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது - கடற்படை ப...