13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – ஐ.தே.க. உறுப்பினர் வலியுறுத்து!

Tuesday, February 14th, 2023

அரசியலமைப்பின்  13ஆம் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை தவிர காணி அதிகாரத்தை  வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

இதனை முறையாக செயற்படுத்தும் போது காப்போக்கில் பொலிஸ் அதிகாரத்தையும் மாகாணசபைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு ஏற்படாது.

அத்துடன் 13 ஆம் திருத்தம் தொடர்பில் மக்களுக்கு பிழையான கருத்தை புகட்டியுள்ளதாலே எதிர்ப்புக்கள் எழுகின்றதே தவிர, அதில் எந்த பயங்கரமான விடயங்களும் இல்லை என ஐக்கிய தேசிய முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர்   அசோக்க தனவங்ச தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (பெப் 13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நாட்டுக்குள் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒருசிலர் இதனை தங்களின் குறுகிய அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்கு பிழையான தகவல்களை தெரிவித்து வருகின்றன.

சில பெளத்த தேரர்களும் 13 தொடர்பில் சரியான முறையில் தெரிந்துகொள்ளாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

13ஆம் திருத்தம் என்பது எமது நாட்டின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை யாராலும் மறுக்க முடியாது. மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதற்கே இன்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் பொலிஸ் காணி அதிகாரங்களை தவிர இன்னும் பல அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு இல்லாமல் இருக்கின்றன.

அது தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. என்றாலும் பொலிஸ் அதிகாரம் தவிர காணி அதிகாரத்தை வழங்கி, தேசிய காணி ஆணைக்குழு அமைத்து அதன் ஊடாக காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். காணி அதிகாரத்தை தேசிய காணி ஆணைக்குழு ஊடாக செயற்படுத்தும் போது யாருக்கும் பிரச்சினை ஏற்படுவதில்லை.

இதனை  முறையாக செயற்படுத்திக்கொண்டு செல்லும் போது காப்போக்கில் பொலிஸ் அதிகாரத்தையும் மாகாணங்களுக்கு வழங்க முடியுமாகும். மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் என சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் அதனை முறையாக செயற்படுத்திளால் அவ்வாறான எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை.

அதனால் தற்போது ஜனாதிபதி தீர்மானத்துள்ளதன் பிரகாரம் காணி அதிகாரத்தை வழங்கி அதனை தேசிய காணி ஆணைக்குழு ஊடாக செயற்டுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இதனை முறையாக செயற்படுத்தும் போது காலப்போக்கில் பொலிஸ் அதிகாரத்தையும் மாகாணங்களுக்கு வழங்குவதில் பிரச்சினை ஏற்படாது.

அத்துடன் மாகாணசபைகள் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யுமாக இருந்தால், அதனை தடுப்பதற்கு அல்லது மாகாண சபையை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதேநேரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறான துஷ்பிரயோகம் இடம்பெறுவதை தடுக்க முடியும்.

அதனால் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் விடயங்களை மாகாணங்களுக்கு முழுமையாக வழங்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. என்றாலும் ஒருசிலர் திட்டமிட்டு, குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே இதனை குழப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: