சங்குப்பிட்டியை அபகரிக்கும் வனவளத் திணைக்களத்துறை – குற்றச்சாட்டுகின்றனர் கடற்றொழிலாளர்கள்!

Friday, October 25th, 2019


யாழ்ப்பாணம் ௲ மன்னாருக்கான முதன்மைப் போக்குவரத்துப் பாதையான ஏ-32 வீதியில் உள்ள கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகே முதன்மை வீதி மற்றும் கடல் பகுதிகளையும் வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று கடற்றொழிலாளர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.

காடு மற்றும் அதிக மரங்கள் வளர்ந்த பகுதிகளை இதுவரை அபகரித்து வந்த வனவளத் திணைக்களத்தினர், தற்போது ஆள் உயர கண்டல் மரங்கள் ஆங்காங்கே காணப்படும் வீதியும், கடற்றொழிலாளர் மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு ஏதுவான பிரதேசமாகக் காணப்படும் சங்குப்பிட்டியையும் அபகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடல் பகுதியினால் அது கடற்றொழில் நீரியல் திணைக்களத்தின் கீழேயே காணப்படும். ஆனால் பூநகிரியில் மண்ணித்தலைக்குத் திரும்பும் இடங்களை அண்டிய பகுதிகள், கௌதாரிமுனை எனப் பல இடங்களில் தற்போது வன வளத்திணைக்களத்தினர் எல்லைக்கற்களை நட்டு வருகின்றனர். இதனால் இப் பகுதியில் தொழிலில் ஈடுபட முனையும் மீனவர்கள் அல்லது தொழிலாளர்கள் எதிர்காலத்தில் வனவளத் திணைக்களத்திடம் அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலமை ஏற்படும்.

கடல் மட்டுமே காணப்படும் சூழலில் வனப்பகுதி இல்லாத போதிலும், வன வளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்படும் மர்மத்தைப் புரிந்த கொள்ள முடியவில்லை. இவ்வாறு எல்லைக் கற்கள் நடப்படும் பகுதிகளுக்குள் அரச காணிகள் மட்டுமன்றி தனியார் வாழ்விடம், வயல் பிரதேசங்கள், மீனவர் இறங்கு துறை ஆகியவற்றுடன் மயானமும் தப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எமது பிரதேசத்தின் பெரும் பகுதியை மக்கள் இழக்கும் அவலம் காணப்படுகின்றது. இது தொடர்பில் பிரதேச செயலரின் கவனத்துக்கும் கொண்டு செல்கின்றோம். இருப்பினும் அந்தக் கற்கள் எவையும் அகற்றப்படவில்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Related posts: