ஹரிஸ்ணவி மக்களுடைய மனங்களிலிருந்து மறைந்துவிட்டாளா ? தாயார் உருக்கம்!
Wednesday, November 22nd, 2017
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட எனது மகள் ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவேண்டும். அவளுடைய துயரச் சம்பவம் மக்கள் மனங்களில் இருந்து அகன்று வருகிறது என அவரது தாயார் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
கணவனைப் பிரிந்து வாழ்ந்த எனக்கு உதவியாக எனது மகளே இருந்தாள். இன்று அவள் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கமுடியாதுள்ளது. பாடசாலைக்குப் போகவில்லை என்று வீட்டில் இருந்தவளைச் சடலமாகவே கண்டேன். அவளைச் சிதைத்தவர்கள் வெளியில் நடமாடுகின்றனர். அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.
ஹரிஸ்ணவிக்காகப் போராடியவர்களுடைய மனங்களிலிருந்து அவள் மெல்ல மெல்ல விலகுகின்றாள். குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது. இது போன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என்றால் ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
வவுனியா உக்கிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியன்று அவளது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தாள்.
அன்றைய தினம் பாடசாலை செல்ல மறுத்து தனியாக இருந்தபோதே அந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. சடலம் வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு விசாரணையை மேற்கொண்ட அதிகாரி ஹரிஸ்ணவியின் உடலில் நகக்கீறல் இருப்பதாகவும் அவள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சம்பவத்தின் பின்னர் வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகாணம் எங்கும் நீதிகோரிப் போராட்டங்கள் இடம்பெற்றன. குற்றவாளி கைது செய்யப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று பலத்த கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டங்களின் பின்னர் ஹரிஸ்ணவி வீட்டுக்கு அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணைகளில் அவர் 6 மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஹரிஸ்ணவியின் வீட்டாருக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்ற கடுமையான உத்தரவுடன் அவர் பிணையில் வெளிவந்தார். தொடர்ந்தும் வழக்குகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி அடுத்த தவணை வழக்கு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


