வேலைவாய்ப்பில் 2013/2014 பட்டதாரிகளையும் உள்ளீர்க்குமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

Tuesday, September 8th, 2020

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2013/2014 கல்வியாண்டு மாணவர்களையும் உள்ளீர்ப்பு செய்யுமாறு கோரிக்கையினை முன்வைப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் நாளை காலை 9 மணியளவில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கவுள்ளனர் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், துணைவேந்தர் நியமனம் பிற்போடப்பட்டமை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கலைப்பீட 2013/2014 கல்வியாண்டு மாணவர்கள் பட்டப்படிப்பை பூர்த்திசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் 50 ஆயிரம் பட்டதாரி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட காலப்பகுதியில் 2013/2014 கல்வியாண்டு மாணவர்களுக்கான பரீட்சை முடிவுகள் வெளியிடப்படாததால் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது.

எனினும் தற்போது 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் பட்டதாரிகளை உள்ளீர்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அவ் நியமனங்களுக்குள் 2013/2014 கல்வியாண்டு மாணவர்களையும் உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கவுள்ளோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: