வெள்ளவத்தை கட்டட சம்பவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

Thursday, June 1st, 2017

வெள்ளவத்தையில் உரிய அங்கீகாரத்தை பெறாமல் கட்டப்பட்ட மாடிக்கட்டிடம் தொடர்பில் அங்கீகாரம் அளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.சமீபத்தில் வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த மாடிக்கட்டிடத்தை தொடர்ந்து சுமார் ஆயிரத்து 800 மாடிக்கட்டிடங்கள் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.3 மாடிக்கட்டிடம் அமைப்பதாக கூறி அனுமதியை பெற்று பின்னர் 7 , 8 மாடிக்கட்டிடங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறானவற்றிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு காரணமான திடீர் மழைவீழ்ச்சி குறித்து முன்கூட்டியே அது தொடர்பான தகவல்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்க தவறியதாக சில செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள காலநிலை தொடர்பாக முன்கூட்டியே அறிந்துகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இல்லை. இதனை பெற்றுக்கொள்வதற்காக உலகவங்கியின் உதவியுடன் அதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளது.இந்த திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதாகும். எந்தவொரு நாட்டிலும் திட்டவட்டமான மழைவீழ்ச்சியை முன்கூட்டியே அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை . இருப்பினும் அனர்த்தம் தொடர்பான எதிர்வுகூறல்களை இவ்வாறான தொழில்நுட்ப வசதிகள் வளிமண்டல திணைக்களத்திற்கு கிடைத்த பின்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

Related posts: