வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பியுங்கள் – அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை!

Tuesday, February 1st, 2022

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கை நெறிகளை ஆரம்பிக்குமாறு தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொழில்முறை மட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாடசாலையிலிருந்து விலகி வெளிநாடு செல்லும் இளைஞர் யுவதிகளை அங்கு திறமையான தொழிலாளர்களாக பணிபுரிவதற்கு வழியேற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் திறமையுள்ள போதிலும் பயிற்சி சான்றிதழ் அற்றவர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையையும், இந்நாட்டு இளம் சமூகத்தினரையும் இணைக்கக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அவர்களினால் தற்போது வேலைவாய்ப்புகள் உள்ள நாடுகள் மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் துறைகள் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு ஆகியன ஏற்கனவே இளைஞர் யுவதிகளுக்காக தொழில்சார் துறைகளை உள்ளடக்கும் வகையிலான வெளநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை ஆரம்பித்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி வரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட  வேலைவாய்ப்புகளில் ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ருமேனியா, டோஹா கட்டார் உள்ளிட்ட 22 நாடுகளில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 198 வேலைவாய்ப்புகளுக்கு பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு தேவை உள்ளதாக குறித்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


குளக்கரை வீதியின் புனரமைப்பு எப்போது நடைபெறும்? - ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்க...
கணினி தரவு அறிவியல் , மென்பொருள் பொறியியல் துறைகளில் புதிய தொழில்வாய்ப்பு - பத்தாயிரம் மாணவர்களுக்க...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!