வெளிநாட்டு கையிருப்பை 3 பில். டொலராக அதிகரிக்க வேண்டும் – தவறின் எவராலும் நாட்டை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!
Saturday, December 10th, 2022
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 03 பில்லியன் டொலராக அதிகரிக்காவிட்டால் எம்மால் மட்டுமல்ல எவராலும் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாதென அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் வரி அதிகரிப்பு செய்கிறது அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென குறுகிய அரசியல் நோக்கத்தில் பார்க்காமல் நாட்டில் என்ன நடக்கின்றது? உண்மையில் என்ன நடந்துள்ளது? என்பதை சிந்தித்து எதிர்க்கட்சி செயற்பட வேண்டிய காலம் இது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடும், நாட்டு மக்களும் இறுதிக் கட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக மட்டுமன்றி பாரிய பொறுப்பை ஏற்று செயல்படுகின்றாரென்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசியல் கட்சி பேதமின்றி அதனை உணர்ந்து அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டம் மூலம் ஆகியவை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
நாட்டில் தற்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு 1,002 பில்லியன் ரூபா அவசியமாகிறது. அதேபோன்று கடன் வழங்குவதற்காக 2,193 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
இவை இரண்டுக்கும் மாத்திரம் 3,195 பில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்கு வரி மூலம் 3,130 பில்லியன் ரூபா மட்டுமே கிடைக்கும். இதனைக் கொண்டு எவ்வாறு நாட்டை முன்னெடுத்துச் செல்வது?
எவ்வாறெனினும் அடுத்த வருடத்தில் நாம் 3,130 பில்லியனை அரச வருமானமாக எதிர்பார்க்கின்றோம் அதனைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
வளங்களை விற்றாவது இதனை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. வரலாற்றில் எல்லாக் காலங்களிலுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


