வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் – முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, April 26th, 2020

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்துள்ளார் .

கடந்த 21ஆம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் திரும்பும்போது இவர்களுடன்கூடப் பயணித்த வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதையடுத்தே குறித்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவப் பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 71 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்தத் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுமுறையில் வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி ஒழுங்குபடுத்தபட்ட தனியார் பஸ் ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பேருந்தில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்த பேருந்தில் விடுமுறையில் வீடு திரும்பிய வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் பயணித்துள்ளார். இந்தநிலையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

இதேவேளை, பஸ்ஸில் வந்தவர்கள் எந்தெந்த இடங்களில் தரித்து நின்றனர்? கடைகளுக்குச் சென்றனரா? உள்ளிட்டவை தொடர்பிலும் விசாரணைகள் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: