வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை உள்ளது – தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, January 15th, 2024

மனிதக் குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாகத் தமிழர்களின் தைத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இன்றைய தினம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் எமது செய்திப்பிரிவு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்குமான ஒரு நன்றியறிதலாகக் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மனிதக் குலத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் நன்றியுணர்வு என்ற மாண்புமிக்க அம்சத்தை வருடத்தில் ஒருமுறையாவது உயிரூட்டும் நாளாகத் தைப்பொங்கல் அல்லது சூரியப்பொங்கல் அமைகிறது.

இதேவேளை பொங்கல் பண்டிகையானது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்னாபிரிக்கா, மொரீசியஷ் என தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், உழவர் திருநாளான தைத்திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை உள்ளது.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது.

அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இந்த முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் தினேஷ் குணவர்தன தைத்திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் விதமாக வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது” எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளம் நிறைந்த புத்தாண்டின்,  விடியலைக் குறிக்கும் தைத் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த அறுவடைத் திருவிழா தேசத்தின் உயிர்நாடியின் பிரதிபலிப்பாக அமையும்.

இது தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய மறுமலர்ச்சி என்ற எண்ணக்கருவுக்கு சிறந்ததோர் உந்து சக்தியாகும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வளம் நிறைந்த புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் தைத் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்..

இதனிடையே

சூரிய தேவனுக்கு நன்றி கூறும் மேன்மைமிகு திருநாளான பொங்கல் பண்டிகையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமைக் காரியாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ் மக்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் பொங்கவும், துயர் எனும் இருள் நீங்கி எமது மக்கள் உழைப்பால் உயர்ந்து, உரிமைகள் பெற்று தலை நிமிர்த்தி வாழவும் வழி செய்வோம் என்ற எண்ண வெளிப்பாடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொங்கிவரும் பாலில் அரிசி இட்டு இன்றைய பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில் –

சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்பதற்கு தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!,.. எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற  எமது மக்களின் நம்பிக்கை பெருநாளாக  தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச்செய்தியில்,

தைப்பொங்கல் திருநாள் எமது மக்களின் பண்பாட்டு பெருநாள்,.உழவர் திருநாள் என்றும், தமிழர் பெருநாள் என்றும் எமது மக்கள் தொன்று தொட்டு கொண்டாடி வரவேற்று வரும் தொன்மைத்திருநாள் இது,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாற்றம் ஒன்றை எதிர் பார்க்கும் எமது மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி பொங்கி படைத்து வருகிறார்கள்,.

அது போல், எமது மக்கள் தம் வாழ்வில் இடர் சூழ்ந்த பொழுதுகளில் தம்முடன் கூடவே இருந்து துயர் தீர்த்தவர்களுக்கும்,..இலட்சியங்களை எட்ட முடிந்த, அழிவுகளற்ற யதார்த்த வழிமுறையில் தம்மை வழி நடத்தி செல்வோருக்கும், நன்றி செலுத்தும் பண்பாட்டையும் எமது மக்கள் இன்னமும் வளர்த்தெடுக்க வேண்டும்.

குறைவில்லாது உயிர்கள் வாழவும், மேன்மை மிகு நீதி விளங்கவும்,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதி நிலவவும்,இல்லாமை எனும் இருள் நீங்கி எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழவும்,..நல்வழி காட்டும் நற்றார் மீதான நம்பிக்கையிலும் உறுதியாய் இருத்தல் வேண்டும்.

இலட்சியத்தில் தோற்றால், சூட்சுமத்தை மாற்றுங்கள், இலட்சியத்தை அல்ல என்ற உபதேசங்களை ஏற்று.தோற்றுப்போன வழிமுறைகளை கைவிட்டு, நாம் வகுத்து நடக்கும் நடை முறை யதார்த்த வழிமுறையில்,.. சுபீட்சமான சுதந்திர வாழ்வை சகலரும் பூரணமாக அனுபவிக்கும் மகிழ் காலத்தை விரைவாக வென்றெடுப்போம்.

நாம் நீட்டியிருக்கும் தேசிய நல்லிணக்க கரங்களின் அழைப்பை ஏற்று எமது மக்களை நோக்கியும் பதில் கரம் நீட்டும் சாதகமான நிலைமைகள் கனிந்து வந்திருக்கின்றன.சூழ்நிலைகளை சாதகமாக பயன் படுத்தி மாற்றங்களை உருவாக்குவோம்.அறம் வெல்லும்,.. அநீதி தோற்கும்,௪எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும..

இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் சகல மக்களுக்கும்புது வாழ்வு பூக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: