வீடற்றவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே விடுதியில் குடியிருப்பவர்களை போன்று வாழும் நிலை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Thursday, December 16th, 2021

வீடற்ற மக்களுக்கு அவர்களின் தாயகத்தின் உண்மையான உரிமைகளை வழங்குவதே எமது நோக்கமாகும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச வீடற்றவர்கள் தன் சொந்த ஊரில் விடுதியில் குடியிருப்பவர்களை போன்றவர்கள் என்ற நிலை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட 528 வீடுகளை கொண்ட கொலொம்தொட சரசவி உயன தொடர் மாடிக் குடியிருப்பை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

வீடற்ற மக்களுக்கு அவர்களின் தாயகத்தின் உண்மையான உரிமைகளை வழங்குவதே எமது நோக்கமாகும். நாங்கள் அமுல்படுத்தும் வீட்டுத் திட்டங்களில் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என்ற இனப் பாகுபாடு கிடையாது. மேலும், கட்சி பிளவு இல்லை.

வீடற்றவர்கள் தன் சொந்த ஊரில் விடுதியில் குடியிருப்பவனைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். இன்னும் சில வருடங்களில் அந்த சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும். ஒரு கொள்கையுடன் நாம் இந்த வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டம் அல்ல.

கடந்த காலங்களில் வீடுகளை கட்டுவதை விட வீடுகளை கட்டுகிறோம் என்று கூறுவதற்கு பணத்தை செலவு செய்த அரசாங்கங்கள் இருந்தன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களுக்கான விளம்பரச் செலவு கோடிக்கணக்கான ரூபாவாகும். அந்த பணத்தில் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டியிருக்கலாம்.

எமது நாட்டு மக்களுக்கு அரச வீடமைப்பு திட்டங்களில் நல்ல அனுபவம் உள்ளது. எனக்கும் நல்ல அனுபவம் உண்டு. நிழல் அமைச்சர் என்ற வகையில் நானும் எதிர்க்கட்சியில் அமர்ந்து நாடாளுமன்றத்தில் வீட்டுத்திட்டங்கள் குறித்து பலமுறை பேசியுள்ளேன்.

அந்த நாட்களில், ஜயவர்தனபுரவை சுற்றி சதுப்பு நிலங்களை நிரப்பி வீடுகளை நிர்மாணிக்கும் போது, இவ்வாறு வீடுகளை நிர்மாணித்தால் ஒருநாள் நாடாளுமன்றமும் மூழ்கிப்போகும் என நான் நாடாளுமன்றத்தில் கூறியது எனக்கு நினைவிருக்கிறது.

நம் நாடு குறித்து எண்ணியே நாம் வீடுகளை கட்டுகிறோம். வீட்டுத்திட்டத்தை மக்கள் சார்பான திட்டமாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் நாம் கொடுக்கும் வீட்டில் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் அமைய வேண்டும். அந்த வீட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீட்டை வழங்குவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இதன் கீழ் நகர்ப்புற, கிராமப்புற, தோட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வீடுகள் நிர்மாணிக்கப்படும். நாடு முழுவதும் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

நகர்ப்புற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்குள் 50,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 14,083 வீட்டு மனைகள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது கொரியாவை விரும்பத்தகாத சேரி சூழல் என்றோம். ஆனால் இன்று கொரியா உயர் வளர்ச்சியுடன் கூடிய அழகான நாடு. சீனாவையும் அவமதித்த காலம் ஒன்று இருந்தது. இன்று, சீனா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

2010இல் குடிசைகள் மற்றும் சேரிகள் இல்லாத நாட்டிற்காக நகர்ப்புற வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தினோம் என்று கூற வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் குடிசைகளிலும் சேரிகளிலும் வாழ்ந்த பெருமளவிலான மக்களை மீள்குடியேற்ற முடிந்தது.

கொழும்பு நகரின் பழுதடைந்த கட்டிடங்களை பழைய புகழுடன் மீட்டு நகருக்கு புதிய தோற்றத்தை கொடுத்தோம்.

எனவே, 2015 ஆம் ஆண்டில், கொழும்பு நகரம் ‘வேகமாக அபிவிருத்தியடையும் நகரம்’ என்ற சர்வதேச விருதைக் கூட பெற்றது. அவை அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தால் அழிக்கப்பட்டது.

இப்போது நாம் எங்கே விட்டோமோ அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த குறுகிய காலத்தில் நாங்கள் பல பணிகளை செய்துள்ளோம். ஒவ்வொரு குடும்பமும் வாழ்வதற்குத் தகுந்த வீடு அமைத்து தருவதுடன், நகர்ப்புற மேம்பாடு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கூற வேண்டும்.

அரசியல் நோக்கத்திற்காக அன்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்தே நாம் இந்த வீட்டுத்திட்டத்தை செயல்படுத்துகிறோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

000

Related posts: