விவசாய உற்பத்தி தொடர்பில் புதிய பொறிமுறையொன்று அவசியம் – அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் ஜனாதிபதியின் விசேட பணிப்புரை!

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிப்பதற்காக புதிய பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதுடன் இந்த செயற்பாடுகள் அனைத்து அரசாங்க அதிபர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரை விடுத்துள்ளார் –
கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கியுள்ள ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார ரீதியாக பலம்பெறுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக விவசாயத்திற்கு முன்னுரிமையளித்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதுடன் மாவட்ட மட்டத்தில் சுதேச கைத்தொழில்கள் மற்றும் ஏனைய உற்பத்தி கைத்தொழில்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு முழுமையான உதவியை அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|