விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் – மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி !

Sunday, January 16th, 2022

ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தவறான விமர்சனங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் – கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீள சரிசெய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள விவசாயிகளை தான் எப்போதும் மறக்கமாட்டேன் என உறுதியளித்த ஜனாதிபதி, பயிர்ச்செய்கை முறையில் விரைவில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்தையும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் என்ற வகையில், எப்போதும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, தான் ஆட்சிக்கு வந்த பின்னர் வயல்களில் கால் பதித்து விவசாயத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மறக்க முடியாது என்றும் அவர்களைத் தொடர்ந்து பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை 95 ரூபாய்க்கேனும் நெல்லைக் கொள்வனவு செய்து விவசாயிகளைப் பலப்படுத்துமாறு விவசாயத்துறை அமைச்சருக்குத் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.. இதனிடையே நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். இந்நிலையில் அபிவிருத்தியின் பங்காளியாக இணைந்திருக்குமாறு, ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.. பொய்ப் பிரசாரங்களினால் மனம் தளர்ந்துவிடாமல், நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்துச் செயற்பட வருமாறும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

Related posts: