விரைவில் கொரோனா முடக்கத்திலிருந்து புங்குடுதீவு விடுவிக்கப்படும் – யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Sunday, October 18th, 2020

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தற்பேயதைய யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரச அதிபர் அகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. இருந்தபோதிலும் அச்ச நிலைமை காணப்படுகின்றது. இன்றைய நிலவரப்படி யாழ் மாவட்டத்தில் புங்குடுதீவை தவிர்த்து 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,055 நபர்களை தனிமைப்படுத்தியிருக்கின்றனர்.

பொதுமக்கள் கூடுமானவரை அரச அலுவலகங்களுக்குச் செல்லாது தொலைபேசி வழியாகவோ அல்லது இணையமூலமோ தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் நல்லது. தேவையேற்படின் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் உங்களுடைய சேவைகளை நேரில் சென்றுபெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அவசியமான தேவைகளிற்கு மட்டும் செல்லுங்கள். அப்படி செல்பவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும். அத்துடன் பயணிக்கும் வாகனம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோர், எங்கெங்குசெல்கிறீர்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்து வைத்திருத்தல் வேண்டும்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி வைத்தியசாலை தற்போது கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் அந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தொடர்ந்து இயங்கும். தேவை ஏற்படின் மாத்திரமே அங்கே கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்தோடு அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொற்று உறுதியானவர்கள் உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: