விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் – ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவிப்பு!

Monday, July 5th, 2021

ஒரு பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் குறித்த பகுதியை தனிமைப்படுத்தும் அதிகாரம் கொரோனா உயர்மட்ட செயலணிக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் தங்களது பகுதியை காப்பாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும். பெரும்பாலானவர்கள் அரச அதிகாரிகளை குறை கூறுவதில் கவனம் செலுத்துவதில் மாத்திரம் உள்ளனர்.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரதேசம் தனிமைப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும் வகையில் நாம் செயற்படுவதன் காரணமாகவே பிரதேசம் முடக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எமது பிரதேசம் முடக்கமோ கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கவோ இடமளிக்காமல் இருக்க முடியும்.

எனவே நாம் அனைவரும் எமது பிரதேசத்தினையும், எமது உறவுகளையும் காப்பாற்றும் நோக்கில் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து நடந்துகொள்ள வேண்டும்.

அதனை விடுத்து முகநூல் வாயிலான போலியான வார்த்தைகள் மற்றும் அரச அதிகாரிகளை விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். அத்துடன் பத்திரிகையாளர்கள் மக்களுக்கான விழிப்புணர்வை தமது ஊடகத்தினுடாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: