விபத்துக்குள்ளான கப்பலை அகற்றுமாறு உத்தரவு – சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை!

Monday, July 29th, 2019

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஹூனவட்டுன – ருமஸ்வெல பகுதியில் விபத்துக்குள்ளான ‘ஸ்ரீலங்கன் குளோரி’ என்ற சரக்கு கப்பலை குறித்த இடத்தில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கடற்படைக்கு அறிவித்துள்ளது.

குறித்த கப்பலை மீண்டும் செயற்பட வைத்து கரைக்கு கொண்டு வருவதென்பது சாத்தியமற்றது. கப்பலை உடைத்து அல்லது பாகங்களாக பிரித்தால் மாத்திரமே அகற்ற முடியும். இது தொடர்பில் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் பாறைகள் இருப்பதால் அதனை இயந்திரத்தின் மூலம் கடல்வழியாக நகர்த்தவும் முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த கப்பல் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் அறிவுறுத்தல் வழங்கப்படும்.

எவ்வாறிருப்பினும் இந்த கப்பலை அப்புறப்படுத்துவதற்கு இன்னும் ஒரு மாத காலமேனும் தேவைப்படும். கடற்பாறைகளில் கப்பல் மோதியிருந்தால் அதன் அடிப்பாகத்தில் சிதைவுகள் ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஆனால் கப்பலின் உட்புறத்தில் சிதைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் அதிலுள்ள எரிபொருள் கசிந்து கடலில் கலப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டு வந்ததால் எரிபொருள் கடலுடன் கலக்கவிருந்த ஆபத்து தடுக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கப்பலை அந்த இடத்திலிருந்து நீக்கும் வேலை மாத்திரமே உள்ளது.

Related posts: