விடுமுறை தினங்களிலும் விடுமுறை இல்லை

Friday, April 29th, 2016

வடமாகாணத்திலுள்ள ஆசிரியர்கள், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செயலமர்வுகளுக்கு அழைக்கப்படுவதால் அவர்களுக்கு விடுமுறையானது இல்லாமல் உள்ளது’ என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகளை சனி, ஞாயிறு மற்றும் போயா நாட்களில் நடத்தவேண்டாம் என்று கல்வி அதிகாரிகளிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள போதும், அந்தக் கோரிக்கையானது உதாசீனம் செய்யப்படுகின்றது.

ஏனைய அரச உத்தியோகத்தர்களைப் போன்று ஆசிரியர்களும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலேயே தமது சொந்த அலுவல்களைப் பார்க்க முடியும். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளைக்கூட இவ்வாறான தினங்களில் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர்.

இந்த தினங்களில் அவர்களுக்கு கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதால் அவர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை இவ்வாறு கஷ்டப்படுத்துவதால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் மனநிலைகூட அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

இந்த விடயத்தில் நாம் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் கருத்தரங்கு, செயலமர்வுகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், தொடர்ந்தும் சனி மற்றும் போயா தினங்களில் செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனையும் நிறுத்தவேண்டும். கல்வித் திணைக்கள அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Related posts: