வாழ்வுக்காக வீதியில் போராடும் தொண்டராசிரியர்கள்!

Tuesday, March 27th, 2018

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வேதனத்தை எதிர்பாராது தொண்டர் அடிப்படையில் கற்பித்து வந்த தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் எந்தவித அக்கறையையும் இன்று வரை வடக்கு மாகாணசபை மேற்கொள்ளவில்லை என தெரிவித்த போராட்டதாரிகள் தமக்கு வடக்கு மாகாண சபையால் தொடர்ச்சியாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இன்றுவரை அவை அனைத்தும்; தேர்தல் கால வாக்குறுதிகளாகவே இருந்து வருவதாகவும் இதனால் தாம் தொடர்ச்;சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் ஆதங்கத்துடன்; தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் 1044 தொண்டராசிரியர்கள் கடமையாற்றி வரும் நிலையில் 676 தொண்டராசிரியர்களின் நியமனத்துக்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்ட போதும் ஆவணத் திரட்டின் அடிப்படையில் 182 தொண்டராசிரியர்களுக்கே நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அமைச்சரவையின் அனுமதிக்கமைய சிபார்சு செய்யப்பட்ட 676 தொண்டராசியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு 142 சிங்கள மொழி பேசும் ஆசிரியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிங்கள மொழி பேசும் தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண பாடசாலைகளில் பகுதி நேரமாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த வாரம் ஒருதொகுதி தொண்டராசிரியர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்த நிலையில் அது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி குறித்த பிரச்சினைக்கு காலக்கிரமத்தில் தீர்வு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: