வாழ்வாதார உதவியில் முறைகேடு: பயனாளிகள் பரிதாபம்!

Thursday, March 15th, 2018

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிப் பணத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் 25 ஆயிரம் ரூபாவைச் சுருட்டியது அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு வாழ்வாதார உதவி பெறும் குடும்பங்கள் உரிய உதவிகளைப் பெற முடியாது ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்கள் ஊடாக மீள்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக தலா ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பிற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கால்நடைகள் அப்போது வழங்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளின் பெயரில் அப்போது வங்கியில் வைப்பிலிடப்பட்டது. தற்போது அந்தப் பணம் விடுவிக்கப்பட்டு அவற்றுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கே.என். – 44 பரந்தன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 25 ஆயிரம் கையாடப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

பயனாளியின் வங்கியில் இருந்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடந்த 6 ஆம் திகதி அப்பிரிவில் கடமையாற்றுகின்ற பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பெற்று அப்பணத்துக்கு பசுமாடு ஒன்றை தனது கணவர் ஊடாக வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் மாட்டை விற்றவர் அதனை 75 ஆயிரம் ரூபாவுக்கே தான் கொடுத்ததாக பயனாளியான பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கண்டாவளைப் பிரதேச செயலகத்தினால் குறித்த பயனாளிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கால்நடையின் பெறுமதி ஒரு இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைவிட மாட்டை கால்நடை வைத்தியர் சிபாரிசுக்கு கொண்டு சென்று அங்கீகாரம் பெற்றமைக்காகவென மேலும் மூவாயிரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்துக்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள பயனாளியான பெண் தான் ஏமாற்றப்பட்டமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல மோசடிகள் இப்பிரதேசங்களில் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: