வாழ்நாள்வரை தன்னம்பிக்கையோடு வலம் வர மதிப்பெண் மட்டும் போதாது – பருத்தித்துறை பிரதேச முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Thursday, December 7th, 2023
ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை மெருகேற்றும் களமாக பாடசாலைகள் மாறும்போது நம்மால் முடியுமா? என்று கலங்கி நிற்பரும் கூட நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை பெறுகின்றனர் என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறியிருந்த அவர் மேலும் தெரிவிக்கையில் –
மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கைகளே பிறப்பிடம். அந்த நம்பிக்கையினை மாணவர் மனதில் விதைத்து விட்டால் அதுவே மரமாக, உரமாக வாழ்வின் வரமாக அமைந்துவிடும். பாடப்புத்தகங்களை புரிந்து கொள்ளுதல் பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல் சிறந்த மதிப்பெண் பெறல் இச்செயற்பாடு மாணவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கையை ஊட்டும். ஆனால் வாழ்நாள்வரை தன்னம்பிக்கையோடு வலம் வர இந்த மதிப்பெண் மட்டும் போதாது.
அவர்கள் வாழும் நீளம் வரை அவர்கள் தன்னம்பிக்கையோடு திகழ இங்கு முழுமை நலக் கல்வியே முக்கியம். அந்த முழுமை நலக் கல்விதான் மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரண தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஒரு செடியில் பூக்கும் ரோஜாவைக்கூட ஒரேமாதிரி ஒப்பிடக் கூடாது என்பதில் கவனம் வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் தனித்துவமானவர்கள் ஒவ்வொரு குழந்தையையும் கூர்ந்து பொறுமையாய் கவனித்து வழிநடத்தும் போது, மாணவர்களின் பரிபூரணத்தன்மை அழகாக வெளிப்படுகிறது. அந்த பரிபூரண நிலையில் அவர்கள் தன்னையே மறப்பார்கள். தன்னுள்ளே மலர்வார்கள். அதுவே சிறந்த கற்றல் செயற்பாடு. பாடசாலைகளில் இந்த செயல்பாடுகளை கட்டமைப்பு செய்து விட்டால் பாடசாலைச் சூழல், பாடப்புத்தகம் இவை சுமையாக இல்லாமல் சுகமாக அவர்களுக்கு மாறிப் போகும் என அவர் மேலும் தெரிவித்தார்
000
Related posts:
|
|
|


