வாழ்க்கை செலவு குழு நாளை கூடுகின்றது – பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு!

Thursday, September 23rd, 2021

வாழ்க்கை செலவு குழு நாளை முற்பகல் 10 மணியளவில் அலரி மாளிகையில் கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பால்மா விலை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்திற்கொண்டு பால்மா விலையினை அதிகரிக்குமாறு அதன் இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தைக் கோரியிருந்தனர். எனினும் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

இதனையடுத்து, தங்களுக்கு ஏற்படும் நட்டத்தினை கருத்திற் கொண்டு பால்மா இறக்குமதியினை அதன் இறக்குமதியாளர்கள் இடைநிறுத்தியிருந்தனர். இதனால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில், பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் கடந்த 19 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்களால் கோரப்பட்டது. எனினும் ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது

இதற்கமைய இது தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழுக்கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய பால்மா வகைகளின் விலைகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தேசிய பால் உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் இன்னல்களைத் தடுக்கவும் உள்ளூர் பால்மா உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலைகளுக்கமைய தேசிய பால்மா வகைகளின் விலைகளையும் அதிகரிக்குமாறு உள்ளூர் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: