வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் 06 மற்றும் 27ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக அறிவிப்பு!

Saturday, August 14th, 2021

பல்வேறு காரணங்களினால் நாடாளுமன்றத்தில் கேட்கப்படாதுள்ள 68 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 06 ஆம், 27ஆம் திகதிகளில் முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரையான நேரத்தை ஒதுக்குவதற்கு அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓகஸ்ட் 17 ஆம் திகதிமுதல் ஓகஸ்ட் 20ஆம் திகதிவரை நான்கு நாட்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணி வரை கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம், பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 05 கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓகஸ்ட் 18 ஆம் திகதி இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான 03 கட்டளைகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல்கள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அதியாயம் 235 – 02 தீர்மானங்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த இரு தினங்களும் பிற்பகல் 4.30 மணிமுதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கும், ஓகஸ்ட் 17ஆம் திகதி பிற்பகல் 4.50 மணிமுதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கும், ஓகஸ்ட் 18ஆம் திகதி எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஓகஸ்ட் 19ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை தேருநர்களைப் பதிவு செய்தல் திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி நிறைவேற்றப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நண்பகல் 12.00 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் ‘இலங்கை கல்வித் துறையில் தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஓகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் யோசனைக்கு அமைய 2021 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கூடும் நான்கு நாட்களும் முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் நேரத்தை முற்பகல் 11.00 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவர இங்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், 27(2) நிலையியற் கட்டளையின் கீழ் கட்சித் தலைவர்களால் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு 5 நிமிடங்களும், அவற்றுக்குப் பதில்களை வழங்கும் அமைச்சர்களுக்கு 05 நிமிடங்களை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அமைச்சுக்களின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமரின் தலைமையில் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: