வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றக்கூடிய அனைத்து சரத்துக்களும் 21 ஆவது திருத்தத்தில் இணைப்பு – எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டும் என நீதி அமைச்சர் கோரிக்கை!

எதிர்க்கட்சி முன்வைத்த அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், 21 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சட்டமூலத்தில் உள்ள எந்தவொரு விதியையும் வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இருப்பினும் அரசாங்கம் முன்வைத்த 21 ஆவது திருத்தம் 19 ஆவது திருத்தத்தின் மறுசீரமைப்பாக இருக்கும் என்றும் இதில் 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஆகவே வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றக்கூடிய அனைத்து சரத்துக்களையும் 21 ஆவது திருத்தத்தில் இணைத்துள்ளதாக குறிப்பிட்ட விஜயதாச ராஜபக்ஷ, இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் சட்டத்தின் ஆட்சி எங்கே என்றும் அவை நிறுவப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|