வவுனியாவில் தொடந்தும் வான் பாயும் குளங்கள் – மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் வலியுறுத்து!
Saturday, November 27th, 2021
மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான குளங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் இமாசலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், இராசேந்திரங்குளம் என்பன தொடர்ந்தும் வான் பாய்வதுடன், பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள கல்லாறு அணைக்கட்டும் வான் பாய்ந்து வருகின்றது.
இதனால் மக்கள் தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் தொடர்ந்தும் அவதானமாக இருக்கவும். மேலும், ஈரப்பெரியகுளத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் அக் குளமும் வான் பாயும் நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,வவுனியாவில் மழை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கன மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்களும் வெள்ள நீர் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இராசேந்திரங்குளம் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
இதன்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 வீடுகளும் பகுதியளவில் சேதடைந்துள்ளன. 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேரும் பாதிப்பரைடந்துள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


