வயது எல்லை பார்க்காது எம்மையும் முன்பள்ளிகளின் ஆசிரியராக்குங்கள்!

Tuesday, April 3rd, 2018

வடக்கின் உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் எழுத்துப் பரீட்சையில் தற்போது தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் உரியவர்கள் உடன் ஆவன செய்து உரிய தீர்வை வழங்க முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ளுராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள 47 முன்பள்ளிகளின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த ஆண்டு பகிரங்க விண்ணப்பம் கோரப்பட்டது. இதன் பிரகாரம் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

ஏற்கனவே நீண்டகாலமாக முன்பள்ளிகளில் தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களும் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி போட்டிப் பரீட்சை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பரீட்சை அனுமதி அட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் முன்பள்ளிகளில் கடந்த 10 தொடக்கம் 15 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணியாற்றும் எமக்கும் எழுத்துப் பரீட்சை என்ற நிலையில் அதற்கும் இணங்கினோம். அதற்கமைய விண்ணப்பதாரிகளில் கல்வித் தகைமை இல்லை என நிராகரித்தால் ஏற்க முடியும் மாறாக பலருக்கு வயது எல்லை காரணம் காட்டப்பட்டு பரீட்சைக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

அதாவது 25, 30 வயதில் குறித்த பணிக்கு வந்து அற்ப சம்பளத்துக்குப் பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில் தற்போது எம்மில் பலருக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றது. எனவே எம்மையும் பரீட்சை எழுத அனுமதித்து நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தி எமது நியாயத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்று சிறப்பு அனுமதியின் பெயரில் குறித்த நியமனத்தை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றனர்.

மேற்படி பணிநிலைக்கு 45 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கே நியமனம் வழங்கப்பட முடியும் எனச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால் 45 வயதினை தாண்டியவர்களைப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண அதிகாரிகள் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாயைகளை காட்டி மக்களை மறுபடியும் ஏமாற்வதை ஏற்கமுடியாது - யாழ் .மாநகர சபையின் பாதீடு தோற்பதற்கு இதுவ...
வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது - தேர்தல் ஆணைக்குழு...
சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது - இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்க...