வடமாகாணத்தின் வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து முதலீட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் முதலீட்டாளர் மகாநாடு!

Tuesday, August 23rd, 2016

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஒழுங்கமைப்பில்,  வடமாகாண முதலீட்டாளர்கள் சபையின் எற்பாட்டில் நாட்டின் “தேசிய வளர்ச்சிக்கு வடமாகாணத்தின் முதலீட்டாளர்கள் பங்களிப்பு”  எனும் தொனிப்பொருளிலான மகாநாடு நேற்று  (22) யாழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.  வடமாகாணத்தின் வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து முதலீட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த முதலீட்டாளர் மகாநாடு  ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.

இதன் போது எதிர்காலத்தில் தேசியளவில் இருக்கின்ற வாய்ப்புக்கள் மற்றும் வடமாகாணத்தின் வாய்ப்புக்கள் தொடர்பான தனது கருத்துரையை இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆற்றியதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவ பீடாதிபதி தி. வேல்நம்பி வடமாகாணத்துக்கான  சிறுதொழில் வாய்ப்புக்கள் எனும் தலைப்பிலும் தமது கருத்துரையையும் நிகழ்த்தினர். அத்துடன் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன். பாலசுந்தரம்பிள்ளை விசேட விரிவுரை ஆற்றினார்.

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முதலீட்டாளர்கள் தாங்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்த போதும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பான நிலைமைகள் இங்கு முறையானதாக இல்லை எனச் சுட்டிக் காட்டியிருந்தனர். இதன்படி, மாவட்டச் செயலகங்களில் காரியாலயம் அமைத்து முதலீட்டாளர்கள் நன்மை பெறும் வகையில் சேவை நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக யாழ். மாவட்டச் செயலகத்துக்கான சேவை நிலையம் அண்மையில் யாழ். மாவட்டச் சேவை வளாகத்தில் திறந்து   வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts: