வடமாகாணக் கல்வி அமைச்சின் அசமந்த போக்கால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாதிப்பு !

Wednesday, January 25th, 2017

ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைகளில் ஆசிரியர் பயிற்சியை முடித்து பல வருடங்கள் ஆகின்ற போதிலும் வடமாகாணக் கல்வி அமைச்சு கண்மூடி இருந்து வருகின்றமையால் பல ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்காது பாதிப்பை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பலர், பல வருடங்களாக குறைந்த சம்பளத்திற்கும், ஓய்வூதியத் திட்டத்திற்குள் உள்ளீர்க்கப்படாமலும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிய படி சேவையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர்களாக 3,000 ரூபா சம்பளத்திற்கு முழு நேரக் கற்பித்தல் பணிக்காக பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பலர் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், அவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்யாமல் கல்வி அமைச்சு அதிகாரம் இருந்தும் ஏனோதானோ என அவர்களைக் கைவிட்டுள்ளமையால் அவர்கள் பாதிப்டைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இலங்கை ஆசிரியர் சேவைக்கு வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவையின் பிரமாணங்களின் படி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சி முடிக்காத அல்லது பட்டம் பெறாத ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவை தரம் – 3-II இல் நியமிக்கப்பட்டு ஆசிரியர் கலாசாலைப் பயிற்சிகளை முடித்ததன் பின்னர் இலங்கை ஆசிரியர் சேவை தரம் – 3-I இல் நியமிக்கப்படுவதே இலங்கை ஆசிரியர் சேவையின் பிரமாணக்குறிப்பின் படியான விதி முறையாகும்.

இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு முற்றிலும் முரணான வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சால் கடந்த 2009 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் கலாசாலைப் பயிற்சிகளை முடித்து வருடக்கணக்காகின்றத என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களை இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்புக்களுக்கமைவாக இலங்கை ஆசிரியர் சேவையி தரம் – 3-II இல் நியமனங்கள் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

இதில் கடந்த 2009 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களில் 15 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்ற 450 இற்கு மேற்பட்டவர்களும் பல வருடங்களாக மிகவும் குறைந்த சம்பளத்திற்காக இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாத நிலையில் ஓய்வூதியத் திட்டத்திற்குள்ளும் உள்வாங்கப்படாத நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

தற்போதும் பாதிக்கப்படும் ஆசிரியர்களை தற்போதுள்ள ஆட்சியில் வடமாகாணக் கல்வி அமைச்சால் இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களிற்கமைவாக முறைப்படி இலங்கை ஆசிரியர் சேவை தரம் – 3-II இல் நியமனம் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

இதற்கான அதிகாரம் வடமாகாணக் கல்வி அமைச்சிடம் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இவ்விடயத்தில் வடமாகாணக் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்தாமல் கண்மூடி தனமாக இருந்து வருவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Education-Ministers-Office

Related posts: