வடபகுதியின் வீதி வலையமைப்புக்களை உருவாக்க இந்தியாவிடம் உதவி!

Monday, October 10th, 2016

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த போது, அவர் தங்கியிருந்த தாஜ் விடுதியில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை ஆகியவற்றை இணைக்கும் பிரதான வீதி வலையமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் வரையும், மன்னாரில் இருந்து குருநாகல வழியாக கொழும்பு வரையும், மன்னாரில் இருந்து வவுனியா வழியாக திருகோணமலை வரையும் வீதி வலையமைப்பு உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வீதி வலையமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த உதவும் என்று இந்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீதி வலையமைப்பை உருவாக்குவற்கு இந்தியா தேவையான நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டிருப்பதாகவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வீதி அபிவிருத்தி தொழிற்நுட்பம், மிகவும் பயனுள்ளது என்றும் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக நிதின் கட்கரியுடனான இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்று சிறிலங்கா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The Minister Union Minister for Road Transport & Highways and Shipping, Shri Nitin Gadkari calling the Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka, Mr. Ranil Wickremesinghe, in New Delhi on October 05, 2016.
The Minister Union Minister for Road Transport & Highways and Shipping, Shri Nitin Gadkari calling the Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka, Mr. Ranil Wickremesinghe, in New Delhi on October 05, 2016.

Related posts: