வடக்கு பாடசாலைகளுக்குரிய ரூ.87.5 மில். கைநழுவிப் போனது! மாகாண சபையின் பிடிவாதமே காரணம்!

Thursday, October 11th, 2018

வடக்கு மாகாணத்திலுள்ள 7 பாடசாலைகளுக்கு தேசிய நல்லிணக்க அரச கருமமொழிகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி கைநழுவியுள்ளது. அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை கடைப்பிடித்த அணுகுமுறையே இந்த அவலத்துக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மாகாணத்துக்கு நிதியை நேரடியாக வழங்க வேண்டுமென்றும் திட்டங்களைத்  தாமே தீர்மானிப்போம் என்றும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் அடம்பிடித்ததைத் தொடர்ந்தே ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்த முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

தேசிய நல்லிணக்க அரச கருமமொழிகள் அமைச்சினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் 7 பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளுக்கு இந்த அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு ரூ.1 மில்லியன், இளவாலை ஹென்றியரசர் பாடசாலைக்கு ரூ.25 மில்;லியன், உரும்பிராய் றோ.க. வித்தியாலயத்துக்கு ரூ.12 மில்லியன், கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்துக்கு ரூ.35 மில்லியன், முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்துக்கு ரூ.14.5 மில்லியன், முல்லைத்தீவு வள்ளிபுனம் பாடசாலைக்கு ரூ.10 மில்லியன் என ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்படி நிதி ஒதுக்கீட்டுக்குரிய செலவு மதிப்பீட்டு அறிக்கையை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு தயாரித்து வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு மூன்று மாத காலத்துக்கு முன்னரே அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் செலவு மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. திட்டங்களும் தொடங்கப்படவில்லை.

இந்த ஆண்டு இனி மேற்படி திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்பதால் அந்த நிதி நேற்றைய தினம் வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் காரசாரமாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

செலவு மதிப்பீட்டு அறிக்கை தாமதமடைவதற்கு ஆளணிப் பற்றாக்குறை காணரம் என்று இப்போது கூறப்படுகின்றது. போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் இப்படி அக்கறை அற்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்தத் திட்டங்களை வேண்டுமென்றே தடுக்கப்பட்டுள்ளமை தெரிகின்றது. உங்கள் முரண்பாட்டால் கல்விச் சமூகத்துக்கு வந்த மிகப் பெரிய திட்டத்தை திரும்பிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என்று போராடியவர்களில் நானும் ஒருவன். இந்த மாகாண சபையின் ஆயுள் காலம் எப்போது முடியும் என்று இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எனது அமைச்சால் 400 மில்லியன் ரூபா வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வேலைகளை மாவட்டச் செயலர் ஊடாக முன்னெடுப்பதற்கே அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றது. இதனால் நிதி மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.

இந்த முரண்பாடு காரணமாக மாகாண சபை அதிகாரிகள் மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால் திட்டங்கள் கைநழுவிச் செல்வதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார்.

Related posts: